அடுத்த ஆபத்து நெருங்குவதை அரசு உணர வேண்டும்: அன்புமணி

1 mins read
25f4600f-588f-4758-9a18-47f6f0c4c2f5
அன்புமணி. - படம்: ஊடகம்

சென்னை: மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தேங்கியுள்ள மழை நீரால் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அத்தகையதொரு நிலை ஏற்பட்டால் மக்களால் அதைத் தாங்க முடியாது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

“சென்னை, புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்காக சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.

“தமிழ்நாட்டில் ஏற்கெனவே இன்ஃபுளூயன்சா காய்ச்சலும், டெங்கிக் காய்ச்சலும் வேகமாக பரவி வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த நோய்களும் மழைக்காலத் தொற்று நோய்களும் சேர்ந்து கொண்டால், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவது கடினமாகி விடும்,” என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.

இந்த ஆபத்து வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்குப் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழை நீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்