சென்னை: ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்

3 mins read
3e9deebf-bef7-40ad-89c7-bb934a8c81aa
சென்னையில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஒரு தன்னார்வ தொண்டூழியர் உணவுப் பொட்டலம் வழங்குகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கத் தொடங்கி உள்ளனர்.

பொதுமக்களும் வீட்டு மொட்டை மாடியில் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் செல்கின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இவ்வாறு முடங்கி உள்ள மக்களுக்காக 16 இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுவதாக தமிழக பேரிடர் மீட்புத்துறை அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

தமிழக அரசு சார்பில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேரில் பார்வையிட்ட முதல்வர்

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மீட்பு, நிவாரணப் பணிகளை வேகப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, சென்னையில் கைப்பேசி சேவை சீரடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

கடந்த மூன்று நாள்களாக சென்னையில் கைப்பேசி சேவை மோசமடைந்திருந்தது. லட்சக் கணக்கானோர் பிறரைத் தொடர்புகொள்ள முடியாமல் தவித்தனர்.

இதற்கிடையே தமிழக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள பள்ளிப்பட்டு பகுதியில் தரைப்பாலம் உடைந்ததில் பத்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாமந்தபாடா தரைப் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட பத்து கிராமங்களிலும் மின்சார விநியோகமும் தடைபட்டுள்ளது.

11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன

சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் கடந்த இரு நாள்களாக மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. மாநகராட்சி மேற்கொண்ட வேகமான நட வடிக்கைகளால் பெருப்பாலான சாலைகள் சீரைடந்தன.

எனினும், மாநகரில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

125 வீரர்கள் தமிழகம் வருகை

இந்நிலையில், புயல் மீட்புப் பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து ஐந்து குழுவைச் சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வருகை தந்துள்ளனர். அவர்களில் இரு குழுவினர், சென்னையில் உள்ள வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.

இதேபோல், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இந்தாண்டு 2,000 மிமீ மழைப் பொழிவு

இந்தாண்டு மட்டும் சென்னையில் இதுவரை 2,000 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை நிபுணரான ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை வரையிலான முந்தைய 48 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 469 மிமீ மழை பெய்துள்ளது. ஆவடியில் வரலாறு காணாத வகையில் 564 மிமீ மழையும் பூந்தமல்லியில் 483 மிமீ மழையும் பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழை ஓய்ந்தது; வெள்ளம் சூழ்ந்தது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மதியம் புயலின் தாக்கம் குறைந்தது. மழைப்பொழிவு இல்லையென்றாலும் பலத்த காற்று மட்டும் தொடர்ந்து வீசியது.

இந்நிலையில், கனமழை ஓய்ந்த நிலையிலும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக் கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதி களில் மழை நீர் வடியவில்லை.

குடியிருப்புப் பகுதிகளை நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மழை நீரை அகற்ற அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 6ஆம் தேதி காலை நிலவரப்படி சென்னை வேளச் சேரியில் இருந்து தனியார் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். கடந்த இரு நாள்களாக உணவின்றித் தவித்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியை ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் மறியல்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூரை அடுத்த பாப் பரம்பாக்கம் அருகே உள்ள புதுவள்ளூர் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து மின்சாரம் வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்