சென்னை: தமிழ்நாட்டில் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்துள்ளது.
அம்மையத்தின் ஆண்டு அறிக்கையில் மேலும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான என்சிஆர்பி ஆண்டறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள், வன்கொடுமை களின் எண்ணிக்கை 1,761 என்றும் அம்மையம் கூறியுள்ளது.
“2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,274 ஆகவும் 2021ஆம் ஆண்டில் 1,377 ஆகவும் இருந்தது.
“மேலும் 2022 ஆம் ஆண்டில் 56 தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 168 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் 50 பேர், 18 வயதுக்கும் குறைவான சிறுமியர் 118 பேர் என தேசிய குற்ற ஆவண மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாட்டில் எஸ்சி மக்கள் மீதான வன்கொடுமை களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும், இந்தியா முழுவதும் நடைபெறும் குற்றங்கள் குறித்த ஆண்டறிக்கையை தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டு வருகிறது.
அதில் பெண்கள், குழந்தைகள், தலித்துகள் மீதான வன்முறைகள் குறித்து மாநிலவாரியான புள்ளி விவரங்கள் இடம்பெறுகின்றன.