கிருஷ்ணகிரி: இணையம் வழி பகுதி நேர வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற ஆசைப்பட்ட மூன்று பேர் பல லட்சம் ரூபாயை இழந்து புலம்புகின்றனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தினேஷ்குமாருக்கு வாட்ஸ்அப் செயலியில் அண்மையில் ஒரு தகவல் வந்தது. மிகக் குறைந்த தொகையை முதலீடு செய்தால், இணையம் வழி நிறைய சம்பாதிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததை நம்பிய அவர், இத்தகவலை அனுப்பியவர் கூறியதுபோன்ற ஒரு வங்கிக்கணக்கில் ரூ.12 லட்சம் செலுத்தியுள்ளார்.
பின்னர், அந்த மோசடி நபரின் கைப்பேசியைத் தொடர்புகொண்டபோது அதை அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 27 வயதான அஜீன்குமார் வாட்ஸ் அப் தகவலை நம்பி ரூ.7.35 லட்சத்தையும் ஷமீர் என்பவர் ரூ.17.48 லட்சத்தையும் இழந்துள்ளனர்.
மொத்தம் ரூ.38 லட்சத்தைப் பறித்து மோசடி செய்தவரை செய்தவரை கிருஷ்ணகிரி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அவர் மூன்று பேரிடமும் வெவ்வேறுவிதமான அணுகுறையைக் கையாண்டு பணத்தைக் கறந்துள்ளார். தன் வங்கிக்கணக்குக்கு தொகை வந்த கையோடு கைப்பேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் குறிப்பாக இளையர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

