சென்னை: சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ உள்ளிட்டோர் வெவ்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது அரசு சார்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையைப் படித்துப் பார்த்த சிறப்பு அமர்வு நீதிபதிகள் இரண்டாண்டுகளுக்கு முன்பே சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கைகளை வகுத்தது என்றும் அதன் பிறகு எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மாநில அரசின் கடமை என்றும் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலைதான் இன்னும் நீடிக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
“எனவே இந்த மரங்களை அகற்றுவது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் செயலர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுக் கூட்டத்தைக் கூட்டி திட்டம் வகுக்க வேண்டும்,” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


