ஆற்றில் கார் கவிழ்ந்தது; கேரளத் தம்பதி உயிரிழப்பு

1 mins read
4ae2669f-fb46-4ab5-a879-48a3a0ac8609
பாலத்திலிருந்து கவிழ்ந்த கார் பின்னர் மீட்கப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: திருச்சி அருகே ஸ்ரீரங்கம்-சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் பாலத்தில் வேகமாக சென்ற கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் கேரளத் தம்பதியினர் உயிரிழந்தனர்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தில் கேரள மாநிலப் பதிவெண் உள்ள கார் ஒன்று வெள்ளிக்கிழமை (நேற்று) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், தாறுமாறாக ஓடி பின்னர், பாலத்தின் 19வது மதகு அருகே தடுப்புக்கட்டையை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் கவிழ்ந்தது.

சுமார் ஐம்பது அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் அந்தக் கார் நொறுங்கிப்போனது. 

உயிரிழந்த ஆடவர் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்