கோவை: பள்ளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்காத 11 ஆசிரியர்கள், காவல்துறையினர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆலந்துறை பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 13 வயது மாணவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் மீது அண்மையில் குற்றம் சாட்டப்பட்டது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர் களிடம் அம்மாணவி புகார் அளித்துள்ளார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம், இளையர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
“காவல் துறையினரும் மாணவியின் புகார் குறித்து உரிய வகையில் விசாரிக்கவில்லை. மாறாக புகார் அளித்த மாணவியைக் காவல்துறை வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
“இது போக்சோ சட்ட விதி களுக்கு எதிரானது. எனவே, இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அச்சங்கங்களின் நிர்வாகிகள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.