சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் காவல்துறை விசாரணையில் முன்னிலையாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஆர்.கே.சுரேஷ் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை விசாரணைக்கு முன்னிலையாக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷ் விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் டிசம்பர் 12ஆம் தேதி பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைக்கு முன்னிலையாக உள்ளார்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது.
அந்த நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு வரை வட்டி எனக் கூறி சுமாா் நூறாயிரம் முதலீட்டாளா்களிடமிருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.
அந்தப் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் உள்பட 21 போ் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், நடிகா், தயாரிப்பாளா் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆா்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடா்புள்ளது தெரியவந்தது.
அதனடிப்படையில் காவல்துறை விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் முன்னிலையாக ஆா்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு கடிதம் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ஆா்.கே.சுரேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

