புதுடெல்லி: மக்களவையில் இருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடிக்கணக்கிலான பணம், பரிசுப்பொருள்கள் உள்ளிட்ட லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு மக்களவையில் அதானி நிறுவனங்களுக்கு எதிராக மஹூவா மொய்த்ரா எம்.பி. கேள்வி கேட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மக்களவை நெறிமுறைக் குழு, மஹூவா மொய்த்ராவின் செயல் கொடூரமானது என்று கூறி அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தது.
அந்த அறிக்கை மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக குரல் வாக்கெடுப்பின் மூலமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்தச் சூழலில், அவையில் மஹுவா மொய்த்ரா பேசுவதற்குக்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

