பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லி அருகே உள்ள யமுனா நகரில் இப்போதும் இடுப்பளவுக்கு மழை நீர் தேங்கி நிற்பதால், தற்போது பேருந்துச் சேவை போல இப்பகுதியில் படகுச் சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது. அங்கு வசிக்கும் குழந்தைகள் படகில் பள்ளிக்குச் சென்று திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள சிலர், “சென்னையில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறுவோர், இந்தக் காணொளியைப் பார்த்து நாங்கள் படும் அல்லலை அறிந்துகொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டை யமுனா நகரில் தண்ணீர் வடிவதற்கேற்ற முறையான வசதிகள் இல்லாததே மழை நின்று ஒரு வாரத்துக்குப் பின்னரும் தண்ணீர் தேங்க நிற்க முக்கிய காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
’மிச்சாங்’ புயல் தாக்கத்திற்குப் பின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி விட்டாலும், யமுனா நகரில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி இடுப்பளவிற்கு இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதியினர் ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தினக்கூலி வேலைக்குப் போகும் மக்கள் அன்றாடத் தேவைகளைக் கூடசெய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கீழ்த்தளத்தில் குடியிருந்த மக்கள் மேல் தளத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை மேல் தளத்தில் இருந்து ஏணி வாயிலாக கீழே இறக்கி, படகு வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பிவைத்து, அழைத்து வருகின்றனர்.
இந்தப் பகுதியின் அருகில் செம்பரம்பாக்கம் ஏரி இருப்பதால், தேங்கிய நீரை அகற்ற அகற்ற ஊற்று பெருக்கெடுத்து வருவதால் முறையான வடிகால் அமைத்து தர வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

