சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு அட்டைப் பெட்டிக்குள் வைத்து ஒப்படைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மா. சுப்பிரமணியன், “பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து போனது பரிசோதனையில் தெரியவந்தது. அதன்பின், குழந்தையின் உடல் அங்குள்ள பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
“குழந்தையின் தந்தை உடற்கூறு பரிசோதனை செய்யவேண்டாம் என வலியுறுத்தியதை அடுத்து அவரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
“அட்டைப்பெட்டியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது தவறானது என்பதால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
“மற்றபடி, இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு எதுவும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக மூவர் கொண்ட மருத்துவர் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று கூறினார்.

