பூச்சிக்கொல்லி மருந்துக்குப் பதில் மைதா மாவைத் தூவிய பணியாளர்கள்

1 mins read
6e1382a1-403c-4191-ad45-ab299f456a21
பூச்சிக்கொல்லி மருந்துக்குப் பதிலாக மைதா மாவைத் தெளித்த தூய்மைப் பணியாளர்கள்.  - படம்: தமிழக ஊடகம்

செங்குன்றம்: மிச்சாங் புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை சென்னை, செங்குன்றம் பகுதிகளில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மேற்கொண்டது.

அப்போது, தெருக்களில் தேங்கியிருந்த குப்பைகள், கழிவுகளை அகற்றி பூச்சிக்கொல்லி மருந்தைத் தூவும் பணிகளைத் துாய்மைப் பணியாளர்கள் செய்தனர்.

இப்படிச் செய்வதால் கொசுத்தொல்லை குறைந்து பூரான், பாம்பு, தேள் உள்ளிட்ட நச்சு ஊர்வனங்களின் அச்சுறுத்தல் இருக்காது என மக்கள் நினைத்தனர்.

ஆனால், செங்குன்றம், டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் தூவப்பட்ட மருந்து மீது மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அதைக் கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தபோது மைதா மாவின் வாசம் தெரிந்துள்ளது.

இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் வைத்திருந்த மூட்டையைச் சோதித்தபோது, அதில் ‘பேக்கரி’களில் பிஸ்கட், ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, தாங்கள் பேரூராட்சி அதிகாரிகள் கொடுத்ததைத் தான் துாவி வருவதாகக் கூறினர்.

பூச்சிக்கொல்லி மருந்துக்குப் பதிலாக மைதா மாவு தெளித்த நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் செயலைப் பற்றி நகைச்சுவையாகப் பேசிப் பேசி மக்கள் சிரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்