சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு முக்கியப் பொறுப்பு கொடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய பிரபாகரனுக்கு நல்ல பதவியை வழங்கும்படி பல மாவட்டங்களைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகளும் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில், நாளை வியாழக்கிழமை (14ஆம் தேதி) வளர்பிறை என்பதால் அன்றைய தினமே அவருக்குத் தேமுதிகவில் முக்கியப் பதவி தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் வீடு திரும்பிய சில மணி நேரத்தில் முக்கியப் பொறுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து தேர்தல் பணிகள் வரவுள்ளதால் அதற்கு முன்னரே விஜய பிரபாகரனை கட்சியில் முக்கிய பதவியில் அமர வைக்கவேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விரும்புகிறாராம்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றியும் தேமுதிக செயற்குழு பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.