சென்னை: சென்னையில் எண்ணூர் கழிமுகப் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. அவற்றைக் கண்டறிந்து எண்ணெய்க் கசடுகளை நீக்குமாறு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எண்ணூர் கழிமுக பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுச்சூழல், வனத் துறையால் அமைக்கப்பட்ட குழு அதன் ஆய்வறிக்கையை கடந்த 11ஆம் தேதி சமர்ப்பித்துள்ளது.
அதில், சிபிசிஎல் நிறுவனத்தின் வளாகத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக, எண்ணூர் கழிமுக பகுதியை அடைந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்துக்கு வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, தேங்கியுள்ள கசிந்த எண்ணெய்ப் படிமங்களை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எண்ணெய்க் கசிவை கண்டறிந்து, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை, தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையை வாரியத்துக்கு உடனே வழங்க வேண்டும். தண்ணீரில் எண்ணெய் படர்ந்துள்ள பகுதியை கண்டறிந்து, அதை அகற்ற மேற்கொள்ளப்படும் திட்டத்தை உடனடியாக வாரியத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
சிபிசிஎல் வளாகத்தில் இருந்து எண்ணெய் கலந்த நீர், மாசுபட்ட நீர் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டால், அத்தகைய செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கையில், “எண்ணூர் சுழிமுக பகுதியில் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதற்காக எண்ணெய் உறிஞ்சும் நவீன இயந்திரங்களின் உதவியுடன் அனுபவிமிக்கவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, எண்ணெய்க் கசிவால் அப்பகுதிமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய சென்னை மாவட்ட ஆட்சியருக்கும்,சென்னை மாநகராட்சிக்கும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி மீன்வளத் துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.