தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்

1 mins read
e5ab4214-771c-4146-84f9-a1d77f696d9a
தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன்முறையாக கட்சி நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். விஜயகாந்தைப் பார்த்ததும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று அண்மையில் இல்லம் திரும்பிய கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும் பங்கேற்றார். அவர், பிரேமலதாவின் கையைத் தூக்கி பொதுச் செயலாளர் அறிவிப்பை வெளியிட்டார். பொதுக் குழுவில் மொத்தம் 18 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்துக்குள் சக்கர நாற்காலியில் விஜயகாந்த்தை அழைத்து வந்தபோது, கட்சி நிர்வாகிகளும் அவரது தொண்டர்களும் கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கூட்டம் தொடங்கியதும், மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விஜயகாந்த் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரேமலதா, பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டு உரையாற்றினார்.

“இன்று பொதுச் செயலாளர் என்ற மிகப் பெரிய பொறுப்பை ‘கேப்டன்’ வழங்கியிருக்கிறார். வரும் 2024, 2026 தேர்தல்களில் தேமுதிக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும்,” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேமுதிகவின் உற்சாக முகமாக இருந்துவந்த விஜயகாந்த்தால் இனிமேல் அவ்வளவாக சுடர்விட்டு பிரகாசிக்க முடியாது என்று கூறப்படுவதால், அந்தக் கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாள்களில் வெகுவாகக் குறையலாம். அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்