செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
15724296-ee1c-4dec-80a9-51accc1f921b
படம்: - ஊடகம்

புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பியோட்டம்

திருவள்ளூர்: சென்னை அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது புழல் மத்திய சிறைச்சாலை. இங்கிருந்து பெங்களூருவைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் கைதி வியாழக்கிழமை தப்பியோடியதை அடுத்து, அவரைப் பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான பணிகளுக்குப் பின்னர் எண்ணிக்கையைக் கணக்கிட்டபோது ஜெயந்தி தப்பியது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயா்வு

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரு கிலோ காய்கறி, மொத்த விற்பனையில் ரூ. 20 வரையும் சில்லறை விற்பனையில் ரூ.50 வரையும் உயா்ந்துள்ளது.

முகூா்த்த நாள்கள், பண்டிகைக் காலங்கள் நெருங்குவதால் இன்னும் இரு வாரங்களுக்கு இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டுக்கு ரூ.75,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் எட்டு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.75,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் கடல் நீர் கழிவு குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: சென்னை எண்ணூர் கழிமுகத்தில் தேங்கியுள்ள நீரில் ஃபீனால், எண்ணெய், கிரீஸ் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கழிமுக நீரில் ஒரு லிட்டர் தண்ணீரில் 48.4 மி.கி. ஃபீனால் கலந்துள்ளது.

இந்நிலையில், எண்ணூர் கழிமுகம் அருகே எண்ணெய்க் கழிவு முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்த தமிழக சுற்றுச்சூழல், வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, பாதிப்பு குறித்துக் கணக்கெடுத்து இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

57,000 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் உள்ளிட்ட இடங்களை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெள்ளம் வடிந்த பகுதிகளில் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 57,192 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்