தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புயல் நிவாரண நிதியாக ரூ.12,659 கோடி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

2 mins read
66be4cf6-6671-4f51-a4b2-aede02362f00
மிச்சாங் புயல் நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும் வழங்கிட வேண்டும் என்று மத்தியக் குழுவிடம் கோரிக்கை மனு அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் (நடுவில்).  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அண்மையில் ஏற்பட்ட மிச்சாங் புயல், கனமழை பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் மனுவை மத்திய அரசின் ஆய்வுக் குழுத் தலைவரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மனுவில், மிச்சாங் புயல் பாதிப்பை சரி செய்வதற்கான நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும் வழங்கிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புயல் பாதிப்பு குறித்து கடந்த இரு நாள்களாக ஆய்வு செய்து வந்த மத்தியக் குழுவினர், வியாழக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது புயல் பாதிப்பிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் மீட்சி பெற மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று மத்தியக் குழுவிடம் மனு அளித்தார்.

புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள், மின் கம்பங்கள், மின் நிலையங்கள், குடிநீர்த் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றைச் சீர் செய்திடவும் மனுவில் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கவும் சாலையோர வியாபாரிகள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும் தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும் நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டுள்ளது.

மத்தியக் குழுவினரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “வெள்ளப் பாதிப்பு சமயத்தில் மக்கள் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. அதேபோல் புயல், மழையின் தாக்கத்திற்குப் பின்னர், மீட்பு நடவடிக்கைகளும் முழுவீச்சில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

“புயல், மழையால் ஏற்பட்ட பெரும் சேதங்களைச் சரிசெய்யவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் மட்டும் போதுமானது அல்ல. மத்திய அரசின் பங்களிப்பும் இதற்கு பெருமளவு தேவைப்படுகிறது.

“எனவே, மத்திய அரசிற்கு உரிய பரிந்துரை செய்து, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையைப் பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்