சென்னை விமான நிலையத்தில் 8½ கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read
2d62cf9c-5d16-4384-8b48-364f1f706046
படம் - ஊடகம்

மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இரு வேறு சம்பவங்கள் வழி கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள 8½ கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முதலாவதாக, சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா விசாவில் வந்திறங்கிய மலேசியாவைச் சேர்ந்த 30 வயது ஆடவரின் உடைமைகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் சோதித்தனர்.

அப்போது, தங்கத்தால் செய்யப்பட்ட சுத்தியல் ஒன்றின் மீது கறுப்பு நிற ஒட்டுத்தாளைச் சுற்றி நூதன முறையில் கடத்தி வந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 490 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

அதே போல் குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த 45 வயது சென்னை பயணி, அவசரகால பயன்பாட்டுக்கு உதவும் விளக்குக்குள் மறைத்து ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 930 கிராம் தங்கத்தைக் கடத்திவந்தது தெரியவந்தது.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ரூ.4 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள 8½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மலேசிய வாலிபர், சென்னை வாலிபர் ஆகிய இருவரையும் கைது செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்