நாமக்கல்: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் குடமுழுக்கு விழா அடுத்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
இக்கோயிலின் எழிலை மேலும் கூட்டும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் ஆலய மணிகளை அன்பளிப்பாக வழங்குகிறார்.
நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனம் 12 ஆலய மணி, 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் தயாரிப்பில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்த நிலையில், அனைத்துப் பணிகளும் முடிந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பூசை செய்யப்பட்டு லாரி மூலம் அவை அயோத்திக்கு அனுப்பப்பட்டன.
இதுகுறித்து நாமக்கல் ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ராஜேந்திரனும் அவரது மகன் காளிதாசும் கூறுகையில், “முதற்கட்டமாக 48 மணிகள் தயாராகி உள்ளன. 120 கிலோவில் 5 மணி, 70 கிலோவில் 6 மணி, 25 கிலோவில் ஒரு மணியுடன் 36 பூஜை மணிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 1,200 கிலோ எடை கொண்டவை.
“இரும்பு கலக்காமல் முழுக்க முழுக்க காப்பர், வெள்ளி, துத்தநாதம் ஆகிய மூன்று உலோகங்களைப் பயன்படுத்தி மொத்தம் 25 பேர் ஒன்றுசேர்ந்து கடந்த ஒரு மாத காலமாக இரவு பகலாக இப்பணியை மேற்கொண்டு முடித்துள்ளோம்.
“12 பெரிய மணிகளும் கோவில் பிரகாரத்தில் பொருத்தப்பட உள்ளன. குடமுழுக்கின்போது தமிழகத்தின் இந்த மணிகள் அயோத்தியில் எதிரொலிப்பது பெருமையாக உள்ளது,” என்று தெரிவித்தனர்.

