சென்னை: ஆளும் பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவின் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும் வேலையைச் செய்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு எழுத்தாளர் கி.ரமேஷ் எழுதிய ராமமூர்த்தியின் வரலாற்றுச் சுருக்கம் நூலை வெளியிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் சீதாராம், தொடர்ந்து, கார்ப்பரேட் - மதவாத கூட்டணி, இந்திய அரசியலமைப்பு சட்ட ஜனநாயகம் சீர்குலைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவையும் அதன் தன்மையையும் பாதுகாக்க வேண்டிய சூழல் இப்போது நிலவி வருகிறது. அண்மையில் ஜம்மு - காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வரும் காலங்களில் தமிழகம்கூட பிரிக்கப்படலாம். இவ்வாறு நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் பாஜக குவித்து வருகிறது.
இத்தகைய போக்குக்கு எதிராக தொடக்க காலத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் பி.ராமமூர்த்தி. அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
தமிழகம் பல்வேறு விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினரைக்கூட வெற்றிபெறச் செய்யவில்லை என்ற பாரம்பரியத்தைத் தமிழகம் கொண்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும் அது தொடர வேண்டும் என்று யெச்சூர் கூறினார்.

