சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ராஜசேகர் துபாய் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து அவரை அழைத்து வர தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் துபாய் செல்கின்றனர்.
துபாய் சென்றடைந்தவுடன் அங்குள்ள காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக போலிசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதன் மூலம் துபாய் நீதிமன்றத்தை அணுகி ராஜசேகரை உரிய அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து வர தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் பணம் வசூலித்து ஆருத்ரா நிறுவனத்தார் பண மோசடி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் திரைப்பட நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் கடந்த சில மாதங்களாக துபாயில் பதுங்கி இருந்தார்.
இந்நிலையில் சென்னை திரும்பியுள்ள அவரிடம் காவல்துறை விசாரணை நடத்த உள்ளது.

