சென்னை: உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை முன்னிலையாகும்படி சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னைத் தொடர்புபடுத்தி காணொளி வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த செய்தியாளர்களான மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி கேட்டு மான நஷ்டஈடு கோரி, கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், இந்த வழக்கில் பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தன்னால் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து தனது வீட்டிலேயே வைத்து சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து பழனிசாமியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேரில் முன்னிலையாக பழனிசாமிக்கு விலக்கு அளித்தும், வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது, கோடநாடு வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்ய நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை முன்னிலையாகச் சொல்லுங்கள் என்று அவரது தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதோடு, எடப்பாடி பழனிசாமி விலக்கு கோருவதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் கூறினர்.

