ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இத்திட்டத்துக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் வியாழக்கிழமையன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரின் மூலம் இரண்டு லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பயனடைகின்றன.
இந்நிலையில், கீழ்பவானி ஆற்றின் பக்கவாட்டுப் பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.710 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
எனினும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தை ஏற்கவில்லை. கான்கிரீட் தளம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஊர்வலமாகத் திரண்டு வந்து ஈரோடு ஆட்சியரை சந்தித்து கான்கிரீட் திட்டத்துக்கு எதிராக மனு அளித்தனர்.
90 விழுக்காடு விவசாயிகள் இத்திட்டத்தை எதிர்ப்பதாக கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தெரிவித்துள்ளார்.

