சென்னை: பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கு விருது வழங்கும் விழா ஜனவரி மாதம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள அயலகத்தமிழர் விழாவில் இந்த விருதுகள் வழக்கப்படும்.
தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய எட்டு பிரிவுகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கௌரவிக்க உள்ளார் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி 12ஆம் தேதி அயலகத் தமிழர்கள் தினம் கொண்டாடப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூன்றாவது ஆண்டாக, எதிர்வரும் ஜனவரி 11,12 ஆகிய தேதிகளில் தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளில் அயலகத் தமிழர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகள் இடம்பெற உள்ளன.
அரசு அறிவித்துள்ள எட்டு பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்கள் இணையம் வழி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.