திருச்சி: நகைக்கடை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி பொது மக்களிடம் இருந்து 150 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அந்நிறுவனம் தமிழகத்தில் ஏழு இடங்களில் கிளைகளைத் தொடங்கி பல்வேறு சேமிப்புத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது தொடர்பான விளம்பரங்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.
இதையடுத்து இந்தத் திட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இவ்வாறு 150 கோடி ரூபாய் வரை வசூலித்த பிரணவ் ஜுவல்லரியின் உரிமையாளர்கள் திடீரெனத் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த மோசடி குறித்து தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உரிமையாளர்கள் மதன் செல்வராஜ், அவரது மனைவி ஆகிய இருவரும் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.
இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரித்து வருகிறது.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு விளம்பரங்களில் நடித்ததற்கான தொகை மட்டுமே வழங்கப்பட்டது என்றும் சட்டவிரோதமாக எந்தத் தொகையும் அளிக்கப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, இந்த மோசடி தொடர்பாக பிரகாஷ்ராஜிற்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி இருந்தது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் புதிய விவாதங்களை எழுப்பி உள்ளது.

