தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு வழிகாட்ட புத்தாக்க பயிற்சி மையங்கள்

1 mins read
a1c16f29-1ed4-4858-8ae9-308dc6757cd2
தமிழகத்தின் ஏழு நகரங்களில் புத்தாக்க பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

சென்னை: வெளிநாடு செல்லும் தமிழர்களின் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வெளிநாடுகளில் பணியாற்றச் செல்லும் தமிழர்களின் நலன் கருதி ஏழு மாவட்டங்களில் முன்பயணப் புத்தாக்க பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழர்கள் தங்களுக்கு உறுதியளித்தபடி வேலை, ஊதியம், உணவு, உறைவிடம், வேலை நேரம் உள்ளிட்டவை தொடர்பாக ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக அரசின் அயலகத் தமிழர்கள் நலத்துறையை தொடர்பு கொள்கின்றனர்.

“இத்தகைய கோரிக்கைகளுக்கு அயலகத் தமிழர் நலத்துறை மூலமாக அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள் உதவியுடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன.

அதன்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, அவர்கள் செல்லும் நாட்டின் சட்டதிட்டங்கள், கலாசாரம், மொழி மற்றும் வேலை தொடர்பான குறைந்தபட்ச முன் தயாரிப்புடன் செல்ல ஏதுவாக ஏற்கெனவே சென்னையில் முன் பயணப் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு பணி நிமித்தம் செல்லும் தமிழர்களுக்கு ‘முன்பயண புத்தாக்கப் பயிற்சி’ அளிப்பதற்கான மையங்கள் சென்னை மட்டுமின்றி ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும் ரூ.54,75,000 செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்