மா. சுப்பிரமணியன்: தமிழகத்தில்‘கொவிட்’ பரிசோதனை அதிகரிப்பு

மா. சுப்பிரமணியன்: தமிழகத்தில்‘கொவிட்’ பரிசோதனை அதிகரிப்பு

2 mins read
f7c58e93-0da7-4bc6-b811-8dc974752791
தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்கள் மூலம் 7.83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாறு மண்டலம், சசி நகரில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “மழைக்கால மருத்துவ முகாம்களில் 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து வருகிறது.

“குறிப்பாக, வெள்ளப் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.

“கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும், பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் நான்கு நாள்களில் குணமடைந்து விடுகின்றனர்.

“இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“கடந்த 4 மாதங்களாக குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

“சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுபோன்ற பதற்றமான சூழல் ஏற்படவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்