மதுரை: மதுரை மாநகரில் மோட்டார் சைக்கிள்களில் வந்து கைப்பேசி, நகை, பணப்பை போன்றவற்றைப் பறித்துக்கொண்டு செல்லுதல், இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. அதையடுத்து, மாநகரக் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களில் அதன் நம்பர் பிளேட் படிக்கமுடியாத வகையில் பொருத்தப்பட்டிருத்தல், எண்ணையும் மாற்றி வைத்திருத்தல் போன்ற குற்றங்களைப் புரியும் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் களையெடுக்கும் முயற்சியை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
இதுபோன்ற போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டு காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வகையில், கடந்த இரண்டு நாள்களாக சிறப்பு வாகனத் தணிக்கையில் மதுரை மாநகரக் காவல்துறை ஈடுபட்டுள்ளது. வாகனத் தணிக்கையின்போது நம்பர் பிளேட் இல்லாத 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் நம்பர்கள் தெளிவாக தெரியாதவாறு நம்பர் பிளேட் அமைத்து இயக்கிய 751 வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல்துறை, வழக்குப் பதிவு செய்து சரியான நம்பர் பிளேட் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் அவை விடுவிக்கப்பட்டுள்ளன.
நம்பர் பிளேட் விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அதன் ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.