தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

20 பேருக்கு கொரோனா தொற்று: அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்தகொள்ள அறிவுறுத்து

2 mins read
66adadd7-7004-424b-b94f-dfa4c56832dc
படம் - ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நோயாளிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோரை முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

அத்துடன், தொற்றின் அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகளைச் செய்யும்படியும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்து வந்த கிருமிப் பரவல், அண்டை மாநிலமான கேரளாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜெ.என்.1 எனப்படும் புதிய உருமாற்றம் அடைந்த தொற்று அங்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நோய்த் தடுப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்தோனீசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் காணொளி மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் விவாதித்தார்.

கொரோனா பரவலைக் கண்காணிக்கவும் பரிசோதனைகள், மருத்துவக் கட்டமைப்பை உறுதிப்படுத்தவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி, மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கை கழுவுதல், தனி நபர் இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இணை நோயாளிகள், கர்ப்பிணிகள், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் 317 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஐந்து பேர், கோவையில் நான்கு பேர், நாமக்கல்லில் இரண்டு பேர், காஞ்சிபுரம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதையடுத்து தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்