ஒரே விமானத்தில் தமிழக ஆளுநர், முதல்வர் பயணம்

1 mins read
2bc423c3-46f6-43ba-b13b-aa9ae44fbb1e
நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழக ஆளுநர் ரவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.

இருவரும் திடீரெனச் சந்தித்துக்கொண்டது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை கோவையில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் பயணம் மேற்கொண்ட தனியார் விமானத்தில் முதல் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

முதல்வர் விமானத்தில் ஏறிய ஓரிரு நிமிடங்களில் ஆளுநரும் வந்து சேர்ந்தார். அவருக்கும் முதல் வரிசையில்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர் என்றும் வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், இருவரும் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தி இருந்தது.

அதை ஏற்று அண்மையில் முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதற்கு, தான் வெள்ளப் பாதிப்பு தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பின்னர் வேறொரு நாளில் சந்திப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் இருவரும் எதிர்பாராத விதமாக விமானப் பயணத்தின்போது சந்தித்துக் கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்