தென் மாவட்ட மக்களைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின்

தென் மாவட்ட மக்களைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின்

2 mins read
1f36680b-1f90-4d7c-8565-86f888832452
காயல்பட்டினத்தில் இடுப்பளவு தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், தென் மாவட்ட மக்களைக் காப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்புப்பணி நடைபெற்று வருவதாகவும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்படக்கூடிய தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமித்து கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை அன்று ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், வெள்ள நிலைமையை நேரில் கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை மாவட்டத்துக்கு விரைந்துள்ளார்.

செப்டம்பர் 17, 18ஆம் தேதிகளில் டெல்டா, தென் மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதன்படி, இரு நாள்களாக பெரும்பாலான தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

சில பகுதிகளில் இடைவிடாமல் பலமணி நேரம் பெய்த மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்க நேரிட்டது. தென் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஏற்கெனவே பெய்த மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடிப்பதால் மணிமுத்தாறு அணை நிரம்பியது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த அணைகள் நிரம்பும் பட்சத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆற்றின் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பாய்ந்து வருதால், கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எட்டு பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளப்பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

தென் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதால் உபரி நீரைத் திருப்பி விடுவதற்கான சோதனையோட்டம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் வறண்ட பகுதிகளுக்கு உபரி நீர் திருப்பிவிடப்படும்.

கனமழை காரணமாக தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழைநீர் பல அடி உயரத்திற்குத் தேங்கியுள்ளது. இதனால் ரயில் பாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்