சென்னை: காயல்பட்டினம் பகுதியில் மிக அதிக அளவு மழை பெய்திருப்பது காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் ஒன்று என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் காலநிலை மாற்ற அவசர நிலையைச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.