திருநெல்வேலி: நெல்லையில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டிய நிலையிலும் தம்பதியர் வளைகாப்பு சடங்கை பாதியில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து நடத்தியிருப்பது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.
வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பகவதி, கர்ப்பிணியாக உள்ள தன் மனைவி பார்வதிக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
நெல்லையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்வுடன் தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சியும் தொடங்கியது.
நிகழ்ச்சி தொடங்கிய உடனே மழை கொட்டத் தொடங்கியதால், மண்டபத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. தண்ணீர் ஆறாய் ஓடுவதைப் பொருட்படுத்தாத சிவனடியார்கள் தொடர்ந்து தேவாரம், திருவாசகம் பாடுவதில் ஆர்வம் காட்டினர்.
தொடர்ந்து பெய்த மழை அங்குள்ள மேடையை மூழ்கடித்த பின்னரே நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. தற்போது இந்தக் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

