ராமநாதபுரம்: பொது இடத்தில் தனது உதவியாளருக்கு (டபேதார்) மனிதநேயத்துடன் குடை பிடித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன். அவரது மனிதநேயச் செயலை மக்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலுக்கு அண்மையில் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வந்திருந்தார். ஏராளமான மக்களும் வந்திருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்ததை அடுத்து ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்குக் குடை வழங்கப்பட்டது.
குடையைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், தனது உதவியாளரை அருகில் அழைத்து அவரது தோளில் கைபோட்டபடி மழையில் நனையாமல் பாதுகாத்தார். உடன் வரும் அதிகாரிகள், ஊழியர்கள் நனைந்தாலும் கண்டுகொள்ளாத உயர் அதிகாரிகள் மத்தியில், உதவியாளரும் ஒரு மனிதர் தானே? எனக் கேட்டு குடை பிடித்துள்ள ஆட்சியர் விஷ்ணு சந்திரனை மக்கள் பாராட்டி வருகின்றனர்.