சென்னை: குறுகிய காலகட்டத்திற்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டிய சவாலான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், தென் மாவட்டங்களில் கூடுதல் நிவாரண முகாம்களை அமைப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்காக கோவையில் இருந்து திங்கள்கிழமை இரவு தலைநகர் டெல்லி சென்று சேர்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்தபடியே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி வழி ஆலோசனை செய்தார்.
அதன்பிறகு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல கிராமங்கள் காட்சி அளிக்கின்றன. குறுகிய காலத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டிய சவாலான சூழலில் உள்ளோம்.
“பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநிலப் பேரிடர் மீட்பு படையுடன் காவல், தீயணைப்பு, வருவாய்த்துறையினரும் இணைந்து களப்பணியாற்ற வேண்டும்.
“தென் மாவட்டங்களில் கூடுதல் நிவாரண முகாம்களை அமைத்து, சென்னை பெருவெள்ள மீட்புப் பணிகள் போல தற்போதும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

