500 ரயில் பயணிகள் மீட்பு; பேய் மழைக்கு மூவர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களாக சிக்கித் தவித்துவந்த 500 பயணிகள் செவ்வாய்க்கிழமை மாலை பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை அழைத்துச் செல்ல 13 பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

500 ரயில் பயணிகளுக்கும் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாததால் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.

சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிரமம் நீடித்து வந்த நிலையில், மதுரையில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டது.    

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக பெய்த பேய் மழை காரணமாக இம்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில், பேருந்துப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் இங்குள்ள பல நகரங்களும் கிராமங்களும் எந்தத் தொடர்பும் இன்றி துண்டிக்கப்பட்டு உள்ளன.

நெல்லை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஆறு விமானங்களின் சேவையும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ரத்து செய்யப்பட்டன. 

இந்தச் சூழலில், தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் சாலைகள், பாலங்கள், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதுவரை, 7,500 பேர் வீடுகளில் இருந்து நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

ராணுவம், இந்திய விமானப்படையினர், மத்திய-மாநில மீட்புக் குழுவினர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் சீற்றத்தால் மூவர் உயிரிழந்ததாக பிடிஐ ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் இடியுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏழு மாவட்டங்களுக்குச் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் தென்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதுவரை குறைந்தது 36 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மக்களை மீட்க படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ராணுவம், கடற்படை, விமானப்படையின் சேவைகள் கோரப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் ஷிவ் தாஸ் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் ஆகிய அனைவரும் இணைந்து உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுத்து வருகின்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 17 பேர் மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி சீவலப்பேரியில், தரைமட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இரண்டு அடுக்கு மாடி வீடுகளின் மொட்டை மாடியில் மக்கள் திரண்டனர்.

நாகர்கோவிலில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததை அடுத்து நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுபோன்ற கனமழையை இதுவரை பார்த்ததில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இடைவிடாத மழையால் முக்கிய அணைகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் 5 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வசவப்பபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இந்திய ராணுவம் மீட்டது. அப்பகுதியைச் சேர்ந்த 118 பேர் மீட்கப்பட்டனர்.

காவல் துறை சார்பில் மீட்பு பணிகளில் ஈடுபட பிற மாவட்டங்களில் இருந்து நீச்சல் பயிற்சி பெற்ற 1,000 காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருந்த சூழலில், இப்போது வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!