தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் கனமழை ஓய்ந்து ஒவ்வொரு பகுதியாக மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மழை நின்று வெயில் அடிக்கிறது. இதனால் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி ரயில் நிலையம் மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படத் துவங்கியது.
அதேபோல், வெள்ளத்தால் கடந்த மூன்று நாள்களாக ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை-தூத்துக்குடி விமானச் சேவையும் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
சென்னையில் இருந்து புதன்கிழமை காலை 64 பயணிகளுடன் விமானம் தூத்துக்குடிக்குப் புறப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் ஐவர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
திருச்செந்தூரில் தவிக்கும் பக்தர்கள்
திருச்செந்தூரில் சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் கனமழையால் கோயிலில் சிக்கினர். போக்குவரத்தும் தடைப்பட்டதால், கோயில் மண்டபம் ஒன்றில் தங்கியுள்ளனர்.
தற்போது மழை ஓய்ந்தபின்னரும் பேருந்துப் போக்குவரத்து முழுமையாக சீராகவில்லை. கடந்த மூன்று நாள்களாக கையில் இருந்த பணமெல்லாம் செலவாகி திருச்செந்தூரில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் விரைந்த ராணுவ வீரர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.
“மீட்புப் பணிகள், நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்,” என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம்
தூத்துக்குடியில் ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 27 டன் உணவுப் பொருள்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது. 10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
உணவைத் தயாரித்து குறிப்பிட்ட அளவில் பொட்டலமாகச் செய்து ஹெலிகாப்டர் மூலம் வழங்கி வருகிறோம் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.