சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து பிறப்பித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கின் தண்டனை விவரம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
இதனையடுத்து தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை விட்டு பொன்முடி விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2006ல் திமுக ஆட்சியின்போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.
2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கில் இருந்து பொன்முடியையும் அவரது மனைவியையும் 2016ல் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருவரின் விடுதலையையும் ரத்து செய்து, இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாகக் கூறியது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதால் பொன்முடி, அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் பொன்முடி தாமாகவே முன்வந்து தனது அமைச்சர் பதவியை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வாங்கி, தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் இவ்வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு நாளை தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
பொதுவாக மக்கள் பிரதிநிதிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்பி, எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோகுமா இல்லையா என்பது வியாழக்கிழமை தெரிந்துவிடும்.