மதுரை: அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் 35 பேருக்கும் பங்கிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தொடர்ந்து லஞ்சம் வசூலிக்கப்பட வேண்டிய 75 பேரின் பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அங்கித் திவாரிக்கு பிணை வழங்கக்கூடாது,” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சுரேஷ் பாபு என்ற மருத்துவரிடம் ரூ.40 லட்சத்தை லஞ்சமாகப் பெற்றபோது, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் பெற்ற லஞ்சப் பணத்தை மற்ற ஏழு உயர் அதிகாரிகளுடன் பங்கிட்டுக்கொண்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கித் திவாரி தனக்கு பிணை வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வீ.சிவஞானம் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அங்கித் திவாரி சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், “மனுதாரர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. வேண்டுமென்றே அவர் பெயரைக் கெடுக்கவே இவ்வழக்குப் போடப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் அவருக்குப் பிணை வழங்கவேண்டும்,’’ என்று கோரினார்.
தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.எஸ்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையாகி, ‘‘போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் கையும் களவுமாகத்தான் மனுதாரர் பிடிபட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“சம்பவத்தின்போது திவாரியிடம் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் காரில் இருந்த சிசிடிவி கேமராவில் லஞ்சம் வாங்கிய சம்பவம் அனைத்தும் பதிவாகி உள்ளது.
“லஞ்சம் கேட்டது தொடர்பான வாட்ஸ்அப் உரையாடல்கள், ஆடியோ உரையாடல் பதிவுகளும் ஆதாரமாக உள்ளன.
“இவ்விவகாரத்தில் அங்கித் திவாரிக்கு மட்டுமன்றி 35க்கும் மேலான மூத்த உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
“லஞ்சம், நிதி முறைகேடு உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ளவர்களைத் தொடர்புகொண்டு பணம் பறிப்பதை வாடிக்கையாக இவர் கொண்டுள்ளார்.
“அமலாக்கத்துறை மதுரை மண்டல அலுவலக பீரோவில் இருந்து மருத்துவர் மீதான புகார் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
“அத்துடன், அங்கிருந்த கணினியில் அடுத்தகட்டமாக பணம் வசூலிக்கப்பட இருந்த 75க்கும் மேற்பட்டோரின் பட்டியல் உள்ளிட்ட விபரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
“அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது, அலுவலக சோதனைகள் அனைத்தும் முறையாகவே நடந்துள்ளது. எனவே, அங்கித் திவாரிக்குப் பிணை வழங்கினால், வெளியில் சென்றதும் சாட்சிகளை மிரட்டவும், ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பிணை வழங்கக் கூடாது,’’ என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவஞானம், அங்கித் திவாரியின் பிணை மனுவை புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, சரியாக உணவு உண்ணாமல் அங்கித் திவாரி அழுதுகொண்டே இருப்பதாகவும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் மனநல ஆலோசகர், தற்கொலை தடுப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.