தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க் கசிவு: பாதிக்கப்பட்டோருக்கு ரூ.8.7 கோடி இழப்பீடு

1 mins read
38ecb425-fd41-41f4-85d1-4772c2671d41
மணலி பகுதியில் உள்ள ஆலையிலிருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவால் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் எண்ணெய் படிந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ரூ.86,870,000 இழப்பீடு வழங்கவிருப்பதாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை மணலி பகுதியில் உள்ள ஆலையிலிருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய்க் கழிவால் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் எண்ணெய் படிந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

மேலும், வீடுகளில் படிந்த எண்ணெய்க் கழிவுகளால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், சிபிசிஎல் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் அப்துல் சலீம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், “எண்ணெய்க் கசிவால் 6,700 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா ரூ.7,500, வாழ்வாதாரத்தை இழந்த 2,300 மீனவக் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,500, பாதிக்கப்பட்ட 787 படகுகளுக்கு தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 7 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரத்தை சிபிசிஎல் வழங்கும். ரூ.1 கோடியே 15 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வழக்கு விசாரணை ஜனவரி 11ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்