சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் கௌதமி. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரைப் பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த குற்றவாளிகளைக் கேரளாவின் குன்னம்குளத்தில் வைத்து தமிழகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நடிகை கௌதமிக்குச் சொந்தமான 46 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பாஜக பிரமுகர் அழகப்பன் (63), அவருடைய மனைவி நாச்சியாள் (57), மகன் சிவ அழகப்பன் (32), மருமகள் ஆர்த்தி (28), ஓட்டுநர் சதீஷ் குமார் (27) உட்பட ஆறு குற்றவாளிகளைக் கேரளாவின் திருச்சூர் மாவட்டம், குன்னம்குளம் பகுதியில் வியாழக்கிழமை தமிழகக் காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
கைதான அனைவரும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் கேரளாவில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அங்கு விரைந்த 10 பேர் கொண்ட சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.