தூத்துக்குடி மக்களுக்கு உதவும் பணியில் 3,500 காவல்துறையினர்

2 mins read
24b46082-b3a9-4063-ab6b-8a986248eb37
தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேக்கம் வடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் அந்த மாவட்ட மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கியிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் தேங்கி ஐந்து நாட்கள் ஆன நிலையில் மழைநீர் படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலை, எட்டயபுரம் சாலை, ஜெயராஜ்சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் தேங்கிய மழைநீர் வெகுவாக வடிந்துள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து படிப்படியாக சீராகத் தொடங்கியுள்ளது. மேலும், மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகமும் சீரானது.

இதேவேளையில் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் தொடர்ந்து மழைநீரில் சிக்கி தத்தளிக்கிறது. தூத்துக்குடி அண்ணாநகர், மகிழ்ச்சிபுரம், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், முருகேசன் நகர், தபால் தந்தி காலனி, தேவர் காலனி, பசும்பொன் நகர், டைமண்ட் காலனி, திருவிக நகர், இந்திரா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, அம்பேத்கர் நகர், தனசேகரன் நகர், மீளவிட்டான், மடத்தூர், நிகிலேசன் நகர், கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், கோக்கூர், பாத்திமா நகர், லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் வெள்ளப் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கும் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் என 3,500க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை டிராக்டர்களில் சென்று அவர்கள் விநியோகித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்