சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடியைத் தவிர்த்து, துரைமுருகன், கே.என்.நேரு, முத்துசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரிய கருப்பன், அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெள்ளப் பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரைச் சந்தித்து வழங்குவதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.
முன்னதாக சென்னை விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை நாங்கள் வரவேற்கிறோம்.
“கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ‘டிஎம்கே ஃபைல்ஸ் 1’ என்பதை நான் வெளியிட்டேன். அதில் பொன்முடியைத் தவிர்த்து 11 அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமைச்சர் பொன்முடிக்கு 13 ஆண்டு காலத்திற்குப் பிறகு இப்போதுதான் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
“இலாகா இல்லாத அமைச்சராக ஒருவர் புழல் சிறையில் உள்ளார். தற்போது மற்றொருவர் பதவி இழக்கிறார்.
“இது மட்டுமன்றி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களும் இதுபோன்ற வழக்குகளைச் சந்திக்க உள்ளனர்.
“தமிழகத்தில் ஊழல் என்பது ஒரு பேசு பொருளாக உள்ளது. 33% அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு கள் உள்ளன. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்,” என்றார்.

