சென்னை: போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக இரண்டு பேர் கைதாகி உள்ளனர். இவர்களுக்கு அனைத்துலக கடத்தல் குழுக்களுடன் தொடர்புள்ளதா என காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.
கைதான இருவரும் இலங்கை குடிமக்கள் என்பதும் தமிழகம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அண்மையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் சென்னை தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆடவரைக் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்ற அந்த ஆடவரிடம் இருந்து இரண்டு கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பின்னர் அக்பர் அலி என்பவரும் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அக்பர் அலியிடம் இருந்து 54 கிலோ எடை கொண்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைத்துலகச் சந்தையில் அவற்றின் மதிப்பு 280 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான இருவரிடமும் விசாரணை நீடித்து வருகிறது.

