சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் 8,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு சக்கர வாகனங்களில் பந்தயம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி இரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். அவற்றில் கலந்துகொள்ள பலர் வருகை தருவார்கள் என்பதால் இவ்வாறு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உதவியாக கூடுதலான எண்ணிக்கையில் ஊர்க் காவல் படையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் 25ஆம் தேதி வரை, சென்னையில் உள்ள ஏறக்குறைய 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரி முனை அந்தோணியார் தேவாலயம், அண்ணா சாலை புனித ஜார்ஜ் தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களுக்கு அருகே கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தப் பகுதிகளில் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலமும், சீருடை அணியாத காவல்துறை அதிகாரிகள் மூலமும் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் முக்கிய சாலைச் சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகனச் சோதனைகளும் நடத்தப்படும்.
மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடங்களுக்காக போக்குவரத்துக் காவல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

