முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் காலமானார்

முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் காலமானார்

1 mins read
19307483-8468-4203-be92-b6a254da9e5e
திரு எம்.எம்.ராஜேந்திரன். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: ஒடிசா மாநில முன்னாள் ஆளுநரும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி அவர் காலமானார். அவருக்கு சுசீலா என்கிற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

1957ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகி உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் போன்ற பொறுப்புகளை வகித்த பின்னர் திரு ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரானார். 1964ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை திறம்பட எதிர்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தார். அந்த அனுபவம் மூலம் 1999ல் ஒடிசா ஆளுநராக இருந்தபோது வந்த புயலை திறம்பட எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றினார்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய ராஜேந்திரன், 1989ஆம் ஆண்டில் திரு கருணாநிதி முதல்வரான பிறகும் அதே பதவியில் தொடர்ந்து பணியாற்றினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் யுனிசெஃப் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நியூயார்க்கில் அதன் திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

திரு எம்.எம்.ராஜேந்திரனின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்