முன்னாள் காதலியை எரித்துக் கொன்றவர் கைது

முன்னாள் காதலியை எரித்துக் கொன்றவர் கைது

2 mins read
8df4bb04-ff0b-4050-99de-d8ea194b7569
நந்தினி (இடது), வெற்றி. - படங்கள்: தினத்தந்தி

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை அடுத்த பொன்மார்-மாம்பாக்கம் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் நிறுவனம் உள்ளது.

அந்த நிறுவனக் கட்டடத்திற்கு எதிரே உள்ள காலியிடத்தில் டிசம்பர் 23ஆம் தேதி இரவு 8 மணியளவில், சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டு அங்கு சென்ற வாகனமோட்டிகள், ஓர் இளம்பெண் கை, கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் எரிந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் தண்ணீர் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களுமாக இணைந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் அந்தப் பெண் உயிரிழந்தார்.

பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், எரிந்த நிலையில் கிடந்த அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்தப் பகுதியில் காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு கைப்பேசி சிக்கியது. அதில் பதிவாகி இருந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த பெண் பெருங்குடியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்த மதுரையைச் சேர்ந்த நந்தினி, 25, என்று தெரிய வந்தது.

அவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடினர்.

இதன் தொடர்பில், நந்தினியின் முன்னாள் காதலன் வெற்றி கைது செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 23ஆம் தேதி நந்தினிக்குப் பிறந்தநாள் என்பதால் முன்னாள் காதலன் வெற்றி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் பிறகு ‘பிறந்தநாளில் வியப்பூட்டும் பரிசு தருகிறேன்’ எனக்கூறி அழைத்துச் சென்று கொடூரமாக எரித்துக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தான் காதலித்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், நந்தினி காதலைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

வேறொருவரை நந்தினி காதலிப்பதை அறிந்த வெற்றி திட்டம் போட்டு அவரைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்