14 ரயில் நிலைய ஊழியர்களுக்கு ரூ.5,000 வரை பரிசு அறிவிப்பு

2 mins read
f9f92cb7-956e-4cec-806a-62136dc6de7e
அண்மையில் பெய்த மழையின்போது 54 மணி நேரமாக உணவின்றி உழைத்ததற்காக  ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையக் கண்காணிப்பாளர் ஜாபர் அலிக்கு ரூ.5,000 பரிசு வழங்கி கௌரவிக்க உள்ளது தென்னக ரயில்வே. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கனமழையின்போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணி களுக்கு உதவிய ரயில்வே பணியாளர்கள் 14 பேருக்கு அவர்களின் பணியைப் பாராட்டி தெற்கு ரயில்வே ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையிலான ரொக்கப்பரிசு, 14 பணியாளர்களுக்கும் அவர்களது இந்த மாதச் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இம்மாதம் 17ஆம் தேதி இரவு சென்றது செந்துார் விரைவு ரயில். ஆனால், செல்லும் வழியெங்கும் தண்ணீர் தேங்கி நின்றதால் தண்டவாளங்கள் சரியாகத் தெரியாமல், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

ரயிலில் இருந்த 800 பயணிகளின் நிலை குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் அதிகாலையில் 300 பயணிகள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இரு நாள்களுக்குப் பின்னர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மற்ற 500 பயணிகளை மீட்டு, சென்னைக்கு சிறப்பு ரயிலில் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்த இக்கட்டான நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றி பயணிகளுக்கு உதவிபுரிந்த ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையக் கண்காணிப்பாளர் ஜாபர் அலி, டிக்கெட் பரிசோதகர் இளமாறன் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றிய 14 பேருக்கு ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த 14 பேருக்கும் பொது மேலாளர் ஆர்.என்.சிங் சான்றிதழ் அளித்து பாராட்டு தெரிவிக்க உள்ளார்.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையக் கண்காணிப்பாளர் ஜாபர் அலி கூறுகையில், “நான், 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இருப்பினும், இதுபோன்ற ஒரு நிலையை நான் சந்தித்தது இல்லை. மூன்று மணி நேரத்தில் சரியாகி விடும் என்று நினைத்தோம். ஆனால், 40 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

“முதல் நாளில், பயணிகளுக்கு உடனடியாக உணவு கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது; பயணிகளில் சிலர் கோபமடைந்தனர்.

“இரவில் மின்சாரம் இன்றி, உணவின்றி சிரமப்பட்ட பயணிகளுக்கு உதவியது மகிழ்ச்சியாக உள்ளது,” எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்