50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய குளம்; மலர் தூவி வழிபட்ட விவசாயிகள்

50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய குளம்; மலர் தூவி வழிபட்ட விவசாயிகள்

1 mins read
a8c4028d-6e41-4b82-aed7-97b1f7b729f3
புங்கம்பள்ளி குளம் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிரம்பியுள்ளதால் கடல்போல் காட்சி அளிக்கிறது. அடுத்த படம்: குளத்தின் கரையில் பூசை செய்து, மலர் தூவி வழிபடும் விவசாயிகள், பொதுமக்கள்.  - படம்: தமிழக ஊடகம்

சத்தியமங்கலம்: பு.புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிரம்பியுள்ளதால் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புங்கம்பள்ளி குளத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகள் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்றும் இதனால் இவ்வாண்டு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்படாது என்றும் அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.

தேசிபாளையம், புங்கம்பள்ளி, சுங்கக்காரன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் குளத்தின் கரையில் தேங்காய், பழம் வைத்து பூசை செய்து, குளத்து நீரில் மலர்கள் தூவி வழிபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்து குளம் நிறைய வேண்டும் என கடவுளிடம் வேண்டி பூசைகள் செய்து வழிபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்தக் குளத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 1972ஆம் ஆண்டில்தான் நீர் நிறைந்து வெளியேறியதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முட்புதர்கள் நிறைந்திருந்த இந்தக் குளம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புதான் தூர் வாரப்பட்டது. தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட புங்கம்பள்ளி குளம் நிறைந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.

மேலும் குளத்தில் உள்ள மரங்களில் பறவைகள் முகாமிட்டுள்ள காட்சியும் காண்போர் கவனத்தை ஈர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.