35 ஆண்டுகாலம் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய நடிகர் விஜயகாந்த், 2005ல் மதுரையில் ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார்.
2006ல் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனேக இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று திமுக, அதிமுகவிற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது.
பின்னர் 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இவருடைய கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து 49 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
அதன்பின்னர் சில நாள்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டு விஜயகாந்த் முக்கிய எதிர்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
தலைவர்கள் இரங்கல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல்.முருகன், காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், த.மா.கா தலைவர் வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘விஜயகாந்த் மறைவால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் திரையுலகின் ஜாம்பவான். தமிழ்நாட்டின் அரசியலில் அவரது மறைவு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது, அதை நிரப்புவது கடினம். அவர் எனது நெருங்கிய நண்பராக இருந்தார். பல ஆண்டுகளாக அவருடன் எனக்கு இருந்த நட்பை அன்புடன் நான் நினைவுகூர்கிறேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், ஏராளமான தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி,” என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தின் பதிவில், “சகோதரர் கேப்டன் விஜயகாந்த் நல்ல திரைப்படக்கலைஞர், நல்ல அரசியல் தலைவர், நல்ல மனிதர், நல்ல சகோதரர். ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.